அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் : ஈசுவரப்பா பேட்டி
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும், கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்றும் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சியின் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆட்சியின் மீது காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருக்கு, சித்தராமையாவை பிடிக்கவில்லை.
தன்னை ஆட்சி செய்ய காங்கிரஸ் தலைவர்கள் விடுவதில்லை என்றும், அவர்கள் சொல்படி தான் நடப்பதாகவும் கூறி குமாரசாமி கண்ணீர் வடிக்கிறார். இதுபோன்ற, காரணங்களால் எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். அதனால் இந்த கூட்டணி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது. எப்போது கவிழும் என்றும் சொல்ல முடியாது.
அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதாவுக்கு வருவார்களா? என்பது தெரியவில்லை. பா.ஜனதாவுக்கு வந்தால் வரவேற்போம். எத்தனை எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைவரும் டெல்லி வந்துள்ளோம். கட்சியின் தலைமை உத்தரவுப்படி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் டெல்லியில் தங்கி இருக்கிறோம். கட்சி தலைமை கூறினால் நாங்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்ல தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story