காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 Jan 2019 3:30 AM IST (Updated: 16 Jan 2019 6:04 PM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஓட்டப்பிடாரம், 

காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு வந்து செல்வார்கள்.

அதேபோல் இந்த ஆண்டு காணும் பொங்கலான நேற்று, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்கு காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட சுற்றுலா துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

முன்னதாக காலை 10 மணிக்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் ராமராஜ், வீரசக்க தேவி ஆலய தலைவர் முருகபூபதி ஆகியோர் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் வீரசக்கதேவிக்கு 16 வகையான சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. கோவில் வளாகத்தில் மாட்டுக்கு கோமாதா பூஜை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

கலை நிகழ்ச்சி

தொடர்ந்து மாவட்ட இசை பள்ளி சார்பில் மங்கள இசை, கரகாட்டம், இன்னிசை கச்சேரி, காவடி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மெல்லிசை கச்சேரி, தப்பாட்டம் நடந்தது. கலைமாமணி விருது பெற்ற கைலாசமூர்த்தி தலைமையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டைக்கு வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டு தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மரத்தடியில் அமர்ந்து சென்றனர். குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் விளையாடினர்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு தூத்துக்குடியில் இருந்து குறுக்குசாலை மற்றும் புதியம்புத்தூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசந்திரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story