கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்


கோபி அருகே பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் சாவு சுற்றுலா வந்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:00 AM IST (Updated: 16 Jan 2019 8:20 PM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே சுற்றுலா வந்தபோது பவானி ஆற்றில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

டி.என்.பாளையம்,

திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மகன் ஏசுதாஸ் (வயது 24). பனியன் கம்பெனி தொழிலாளி. இதேபோல் திருப்பூர் லட்சுமி நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் யோகேஸ்வரன் (24). இவரும் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த ஜான் சின்னத்துரை என்பவரின் மகள் ஜெனிதா மேரி (24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர்கள் 3 பேரும் வேலை செய்த கம்பெனிகளும் அருகருகே உள்ளன. இதன்காரணமாக 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் ஏசுதாஸ், யோகேஸ்வரன், ஜெனிதா மேரி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 11 பேர் ஒரு காரில் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு நேற்று சுற்றுலா வந்தனர். அணையை சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் அனைவரும் கொடிவேரி அருகே உள்ள பாதிரியார் தோட்டம் என்ற பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்குள்ள பவானி ஆற்றில் தூண்டில் போட்டு ஏசுதாஸ் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் விழுந்தார். இதனால் அவர் ஆற்றில் மூழ்கினார். அப்போது அவர் `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்` என்று அபயக்குரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு ஓடோடி சென்று ஏசுதாசை, யோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். அவரும் ஆற்றில் மூழ்கினார். இதை பார்த்ததும் ஜெனிதாமேரி அதிர்ச்சி அடைந்து 2 பேரையும் காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். ஆனால் அவராலும் முடியவில்லை. அவரும் நீரில் மூழ்கினார். இதில் ஆற்றில் மூழ்கிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

கரையோரம் நின்றிருந்தவர்கள் இதனைப்பார்த்ததும் ஆற்றில் குதித்து 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏசுதாஸ், யோகேஸ்வரன், ஜெனிதாமேரி ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Related Tags :
Next Story