கொடுமுடி அருகே நண்பர்களுடன் குளித்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கொடுமுடி,
திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.
இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.