திருச்சி அருகே பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 40 பேர் காயம்
திருச்சி அருகே பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை போன்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா பெரியசூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம் பரியமிக்க பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கலுக்கு மறுநாள், அதாவது மாட்டுப்பொங்கல் தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் முதலாவது போட்டியாக பெரியசூரியூரில் ஜனவரி 16–ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரியசூரியூர் பொதுமக்களும், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ளமாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த வருடம் பழைய முறைப்படி காளைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களின் வீடுகளுக்கு சென்று வெற்றிலை, பாக்கு வைத்து காளைகளை அழைத்து வர கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்களிடம் காளைகளை பதிவு செய்தல் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தல் போன்றவை நடைபெற்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு பெரியசூரியூர் கருப்பண்ணசாமி கோவில் திடலில் நடந்த போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு அங்குள்ள குளத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2 நாட்களுக்கு முன்பாகவே வாடிவாசல், காளைகளை அவிழ்த்து விடுவதற்கான மைதானம், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான வி.ஐ.பி. மாடம், பார்வையாளர்கள் அமருவதற்கான கேலரி ஆகியவை அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. ஜல்லிக்கட்டையொட்டி நேற்று அதிகாலை முதலே 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை மற்றும் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து 440 ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். அந்த காளைகளுக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை திருச்சி மண்டல இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் 40 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வழக்கமாக ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்படும் காளைகள் திடகாத்திரமாக இருக்கிறதா? என்று மருத்துவரிடம் தகுதி சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆனால் பெரியசூரியூருக்கு அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்ற சான்றும் கேட்டு இருந்தனர். அதன்படி இரண்டு சான்றிதழ்களும் பெற்று இருந்த காளைகள் மட்டும் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன. இதில் 40 காளைகள் தகுதியின்மை காரணமாக போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. போட்டிக்கு 400 காளைகள் தகுதி பெற்றன.
இதேபோல் மற்றொரு பகுதியில் காளைகளை அடக்க வந்திருந்த மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் மொத்தம் 264 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் மட்டும் தகுதி பெறாததால் 260 பேர் 4 குழுக்களாக சீருடையுடன் களத்தில் இறங்கினர். மைதானத்தை சுற்றி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர். இந்தநிலையில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காலை 8.15 மணிக்கு தொடங்கியது. ப.குமார் எம்.பி. ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேடையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா
தொண்டைமான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்,
கோட்டாட்சியர் அன்பழகன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் அமர்ந்து இருந்தனர். முதலில் நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் காளைக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டது. அந்த காளையை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடுவதற்கு முன்பாக இது கோவில் காளை, அதனை யாரும் அடக்க முயற்சிக்க கூடாது என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.
உடனே அந்த காளை வாடிவாசலில் இருந்து வெளியே துள்ளி குதித்து வந்தது. அந்த காளையை அடக்க யாரும் முயற்சிக்கவில்லை. அதன்பிறகு பெரியசூரியூரை சேர்ந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒவ்வொரு காளையை விடுவதற்கு முன்பாக அதன் உரிமையாளர் பெயர் மற்றும் காளையை அடக்கினால் வழங்கப்படும் பரிசு பொருட்கள் பற்றி ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுகொண்டே இருந்தது. இதனால் மைதானத்தில் நின்ற வீரர்கள் காளையை அடக்கி பரிசை பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.மூக்கணாங்கயிறை உருவியதும், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் சூழ்ந்து கொண்டு அதன் திமிலை பிடித்தும், கழுத்தை கட்டிப்பிடித்தும் அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசிவிட்டு எல்லைக்கோட்டை தாண்டி ஓடின. யாரிடமும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகளை வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 3 மணிக்கு முடிந்தது. காளைகள் முட்டியதில் வீரர்கள் 5 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 11 பேரும், பார்வையாளர்கள் 24 பேரும் என 40 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேருக்கு அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 பேர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே வாடிவாசல் வழியாக காளைகளை கொண்டு செல்லும் பகுதியில் ஒரேநேரத்தில் ஏராளமான காளைகளை கொண்டு செல்ல முயன்றதால் அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் ஏராளமான வீரர்கள் சீருடையுடன் நின்றனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் அடக்க முயன்றனர். ஒரு சிலர் காளைகளை அடக்கினர். இந்தநிலையில் களத்தில் நின்ற வீரர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்கள் காளைகளை அவிழ்த்து விடவில்லை. இதனை கண்ட போலீசார் களத்தில் இறங்கி மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர். தொடர்ந்து இதுபோல் மோதலில் ஈடுபட்டால் மைதானத்தைவிட்டு வெளியேற்றி விடுவோம் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
நாயை இழுத்து வந்ததால் பரபரப்பு ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மேடையை சுற்றி அமர்ந்து இருந்தனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டி அடக்க முயன்றனர். அந்தசமயம் காளையுடன் வந்த உரிமையாளர் ஒருவர் நாயின் கழுத்தில் கயிறு கட்டி மைதானத்துக்குள் இழுத்து வந்தார். இதனை கண்டு மைதானத்தை சுற்றி அமர்ந்து இருந்த பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். சிறிதுநேரத்தில் பார்வையாளர்கள் கூச்சல் போட்டதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து நாயுடன் வெளியேறினார்.இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.