பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.12½ கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.1.10 கோடி அதிகம்
நெல்லை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.12 கோடியே 40 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.12 கோடியே 40 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ரூ.12 ½ கோடி
பொங்கல் திருநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த 14–ந் தேதி ரூ.4 கோடியே 35 லட்சத்துக்கும், 15–ந்தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று ரூ.8 கோடியே 15 லட்சத்துக்கும், ஆக மொத்தம் ரூ.12 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரூ.7.05 கோடிக்கும், அதற்கு முந்தைய நாளில் ரூ.4.35 கோடிக்கும், அதாவது ரூ.11 கோடியே 40 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கலை பண்டிகையை ஒட்டி நடந்த மது விற்பனையை விட, இந்த ஆண்டு ரூ.1 கோடியே 10 லட்சம் அதிகமாக விற்பனை ஆகி உள்ளது.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இந்தநிலையில் நேற்று திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தடையை மீறி எங்காவது மது விற்பனை நடக்கிறதா? என நெல்லை மாநகர பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள ஒரு பாரில் ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜன் மற்றும் போலீசார் அந்த பாருக்கு அருகில் உள்ள மறைவிடத்தில் சோதனை நடத்தினார்கள். அங்கு 30 அட்டை பெட்டிகளில் 1500 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
கருங்குளம் அருகில் 180 பாட்டில்களும், தெற்கு புறவழிச்சாலையில் 100 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தச்சநல்லூர் பகுதியில் மது விற்பனை செய்த சுடலை(வயது40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களையும், சந்திப்பு பகுதியில் மது விற்பளை செய்த கொம்பையா (வயது23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அருகே உள்ள பார் அருகில் பதுக்கிவைத்திருந்த 384 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story