தஞ்சை அருகே பொங்கல் பானையை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை


தஞ்சை அருகே பொங்கல் பானையை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 4:41 PM GMT)

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க கோரி தஞ்சை அருகே பொங்கல் பானையை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆனால் தஞ்சையை அடுத்த குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.30 கோடி வழங்காததை கண்டித்து கரும்பு விவசாயிகள், சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து பொங்கலை புறக்கணிக்கும் வகையில் கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.

பின்னர் சர்க்கரை ஆலை முன்பு கருப்பு கொடி கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கையில் கரும்புகளை ஏந்தியும், தலையில் மண்பானையை வைத்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருப்பதி, செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.30 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கரும்புக்கு குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் விவசாயிகள் தங்களது தலையில் வைத்திருந்த மண் பானையை தரையில் போட்டு உடைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். இது குறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:–

கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த ரூ.2,750–ல் டன் ஒன்றுக்கு ரூ.450 வீதம் ஆலை நிர்வாகம் கொடுக்காமல் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. குருங்குளம் சர்க்கரை ஆலையில் மட்டும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.30 கோடி வரை நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதை வழங்க வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியும் ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகை வழங்க மறுத்து வருகிறது. ஆலை நிர்வாகம் நிலுவைத் தொகையை வழங்காததால் பொங்கல் பண்டிகையை எங்களால் கொண்டாட முடியவில்லை. இதே நிலை நீடித்தால் ஆலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story