மக்கள் நீதிமய்யத்தில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேச்சு
மக்கள் நீதி மய்யத்தில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை என்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசினார்.
பொள்ளாச்சி,
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சான்றோன் விருது வழங்கும் விழா கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மருத்துவ துறையில் சிறப்பான பணிக்காக டாக்டர்கள் உத்ரராஜ், கண்ணகி உத்ரராஜ், சமூக அக்கறைக்காக லெட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், சமூக செயல்பாடு மற்றும் திருநங்கை பாதுகாப்புக்கு கல்கி சுப்பிரமணியம், சுற்றுச்சூழலுக்கு தாகம் என்ற அமைப்பு, தன்னார்வ இளைஞர் சேவைக்கு பியூகன் அறக்கட்டளை, இயற்கை வேளாண்மைக்கு மதுரம் கிருஷ்ணன், பல பயிர் வேளாண்மை விவசாயத்துக்கு சோமசுந்தரம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு மணி சுந்தர், கலை மற்றும் இலக்கியத்துக்கு சிற்பி பாலசுப்பிரமணியம், நாட்டுப்புற கலை இலக்கியத்துக்கு கட்டபொம்மன் பண்பாட்டு கலைக்குழு, அறப்பணி சேவைக்கு சந்திரசேகர், சமூக சேவைக்கு சுகுமார் என 12 பேருக்கு சான்றோன் விருது வழங்கப்பட்டது. இதனை கமல்ஹாசன் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் மேற்கு மண்டல மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கமல்ஹாசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
என்னை நம்மவர் என்று கூறுகிறார்கள். நம்மவர் யார்? நான் இல்லை. நீங்கள்தான், நாம்தான். நம் கட்சியில் உள்ளவர்களின் எண்ணிக்கையை நாம் கூட்ட வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் கொடி ஒவ்வொரு தெருவிலும் இருக்க வேண்டும். இதுவரை நாம் ராமருக்கு அணிலாக இருந்தோம். இனி அப்படி அல்ல. வில் ஏந்தும் நேரம் வந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் ரசிகர் மன்ற கூட்டம் நடத்திய மறுநாள் ராமாபுரம் தோட்டத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
நான் அங்கு சென்றதும் என்ன செய்கிறாய் என்று என்னிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு நான் தொண்டு செய்கிறேன் என்று கூறினேன். மற்றது என்ன என்று கேட்டார். அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அந்த தலைமை தற்போது நீங்கிவிட்டது. பெரிய அளவில் இருந்த அவருடைய புகைப்படம் தற்போது ஸ்டாம்பு அளவாக மாறிவிட்டது.
துப்பாக்கியை ஏந்தி சுட ஒரு கோழை போதும். அந்த துப்பாக்கியை எதிர்த்து வன்முறை இல்லாமல் போராடும் போராளிகளாக நாம் உருவாக வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்ய ஆட்களை தேடி பிடிக்க வேண்டும். இந்த கட்சியில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. அடுத்த வாரிசாக எனது மகள்கள் சுருதியோ அல்லது அக்ஷராவோ இருக்க மாட்டார்கள். நீங்கள்தான் இருப்பீர்கள்.
தமிழக அரசியலை மாற்ற போகும் பெருங்கூட்டம் இந்த தேர்தலில் வாக்களிக்க இருக்கிறது. அந்த கூட்டத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும். நமது நாட்டின் எதிர்காலம் சிறு, குறு தொழில்முனைவோர்களிடம் இருக்கிறது. எனவே நாம் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும். நம்மை பார்த்து நன்மை செய்ய அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அந்த ஆசை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்குள் வர வேண்டும்.
5 வருடங்கள் முழுவதும் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளதால் 30 வருடங்கள் நாம் பின்தங்கிவிட்டோம். நாம் எட்டிப்பிடிப்பது சீனாவைதான் என்று நினைத்து இருந்தோம். தற்போது அப்படி அல்ல பக்கத்து மாநிலத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அளவுக்கு நமது மாநிலத்தின் நிலை பின்தங்கி உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்றால் ஒரே நாளில் செய்ய முடியாது. நமக்கு இன்னும் இருக்கக்கூடிய காலம் 2 மாதம்தான். நினைத்தால் அந்த இடத்தை நாம் அடைய முடியும். நாம் கோழிக்குஞ்சுகள் இல்லை. அக்னி குஞ்சுகள். நாம் எரிமலையாக பொங்குவோம், ஆனால் நாட்டை அழிக்க இல்லை. அழிவில் சென்று கொண்டு இருக்கும் இந்த நாட்டை காப்பற்ற என்று செயல்பட வேண்டும்.
நமக்கு பதவி, பணத்தை பார்த்தால் பயம் வந்துவிடுகிறது. ஒருவர் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினால் திருடன் என்று கத்துகிறார்கள். அதுவே வங்கி மேலாளர் செய்தால் கையாடல் என்கிறார்கள். அமைச்சர் செய்தால் ஊழல் என்கிறார்கள். திருடன், திருடன்தானே. நேர்மையாளன் இருக்கிறார்கள். எனவே நமது கூட்டத்தில் திருடன்கள் சேர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இங்கே கூட்டணி குறித்து பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். கோழிக்கூட்டில் விழுந்தோமே தவிர நாம் கோழிக்குஞ்சுகள் இல்லை. ராஜாளி கழுகுகள். மறந்து விடக்கூடாது. நாம் இவர்களுடன் இருக்க கூடியவர்கள் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்று கூறி கழுவிய கைகளை மீண்டும் அசிங்கப்படுத்த முடியாது. உங்களை வழிநடத்தி போகிறவன், குறுக்கு பாதையில் கொண்டு செல்ல 37 வருடம் கஷ்டப்படுத்தி இருப்பேனா? குறுக்கு பாதையில் போவதாக இருந்தால் என்னை மேம்படுத்தி கொண்டால் போதுமானது என்று நினைத்து இருப்பேன்.
நாம் செல்லும் பாதை கரடுமுரடாக தான் இருக்கும். ஏனென்றால் தமிழ்பால், தமிழ்நாட்டின் பால் கொண்ட காதல் இது. பாதை கரடுமுரடாக தான் இருக்கும். அதை நாம் கடக்கும் கட்டாயத்தில் உள்ளோம். தமிழ்நாட்டின் மீது கொண்ட காதலின் பால் நாம் முன்னேற வேண்டும். அதற்காக தான் நாம் இங்கு வந்துள்ளோம். இந்த விதையை தமிழகம் முழுவதும் பசுமையாக நீங்கள் பரவ செய்ய வேண்டும். சேர வேண்டிய மலையின் முகடு செங்குத்தானது. ஆனால் நமது கரம் வலிமையானது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.