குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்த கார் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்


குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்த கார் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 16 Jan 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குன்னூர்,

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் அமர்ந்த் கோஷ் (வயது 39). இவரது உறவினர் மோலாஸ் கோளி (35). இவர்கள் 2 பேரும் சென்னையில் துணி வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் அமர்ந்த் கோஷ் மற்றும் மோலாஸ் கோளி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர்.

அதன்படி அமர்ந்த் கோஷ், அவரது மனைவி பரோமி கோஷ் (35), மோலாஸ் கோளி, அவரது மனைவி தீபிகா கோளி (30), குழந்தைகள் மோதிஷா கோளி, மோஹித் கோளி ஆகிய 6 பேரும் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர். ரெயில் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்ததும் ஒரு வாடகை காரில் ஊட்டிக்கு சென்றனர். காரை சபீத் அலி என்பவர் ஓட்டி சென்றார்.

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே 13–வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டைஇழந்த கார் தாறுமாறாக சென்றது. இதனால் காரில் இருந்தவர் கள் பீதியில் அலறினார்கள். சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு அந்த கார் அருகே இருந்த கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது 10 அடி பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் கார் சிக்கிக்கொண்டதால் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இல்லையென்றால் அந்த கார் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து இருக்கும்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் லேசான காயங்களுடன் இருந்த 7 பேரையும் கயிறு மூலம் மீட்டு குன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story