விருதுநகரில் இருந்து சென்று இலங்கையில் குடியேற்றம்: பொங்கலை கொண்டாட சொந்த ஊர் வந்த கொழும்பு மாகாண எம்.எல்.ஏ. காமராஜர் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்


விருதுநகரில் இருந்து சென்று இலங்கையில் குடியேற்றம்: பொங்கலை கொண்டாட சொந்த ஊர் வந்த கொழும்பு மாகாண எம்.எல்.ஏ. காமராஜர் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்தினார்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:30 AM IST (Updated: 17 Jan 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையின் கொழும்பு மாகாண எம்.எல்.ஏ.வாக இருப்பவர், பொங்கல் பண்டிகையை தனது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் கோபாலன்பட்டியில் கொண்டாடினார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகில் உள்ள கோபாலன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் குருசாமி. இவரது தந்தை களங்காண்டி, கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்று கொழும்பில் பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து தனது தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட குருசாமி, கொழும்பு மாநகராட்சி உறுப்பினராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தற்போது கொழும்பு மாகாண சபையில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கலை தனது சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு, குலதெய்வ கோவிலுக்கு வந்த குருசாமி குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார்.

இதனை தொடர்ந்து அவர் தனது குடும்பத்தினருடன் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு வந்தார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு நினைவு இல்லத்தில் இருந்த காமராஜர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் புகைப்படங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அவர் ‘தினத்தந்தி‘ நிருபரிடம் கூறியதாவது:–

இலங்கையில் கொழும்பு மாகாணசபையின் எம்.எல்.ஏ.வாக உள்ளேன். தமிழகம் வந்த நான், பெருந்தலைவர் காமராஜர் நினைவு இல்லத்துக்கு வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினேன். எனது ஆசை நிறைவேறி உள்ளது. நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அரசியலில் எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் காமராஜர். அவரை போல் அரசியல்வாதிகள் நேர்மையாக செயல்பட்டால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆனார். ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எங்கள் கட்சியின் தலைமையிலான 3 கட்சிகளை கொண்ட கூட்டணி ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம். ரணில்விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்தோம். 52 நாட்கள் நடந்த இந்த போராட்டத்துக்கு பின்னர் ராஜபக்சே பதவி இழந்தார். ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. எங்கள் கட்சி தொடர்ந்து ஜனநாயகத்துக்காக பாடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story