தேர்தல் கூட்டணிக்கு மோடியின் அழைப்பை தமிழகத்தில் எந்த கட்சியும் ஏற்கவில்லை திருநாவுக்கரசர் பேட்டி


தேர்தல் கூட்டணிக்கு மோடியின் அழைப்பை தமிழகத்தில் எந்த கட்சியும் ஏற்கவில்லை திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 17 Jan 2019 4:00 AM IST (Updated: 17 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் அழைப்பை தமிழகத்தில் எந்த கட்சியும் ஏற்கவில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் பிரசார குழு, விளம்பர குழு, ஒருங்கிணைப்பு குழு, வேட்பாளர்கள் தேர்வு குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து பட்டியல் உறுதி செய்யப்படும். விரைவில் தேர்தல் குழுக்களை ராகுல்காந்தி அறிவிப்பார்.

தமிழகத்தில் மோடிக்கு 5 சதவீத ஆதரவுகூட கிடையாது. எதிர்ப்பு அலைதான் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் மூலம் மோடி அலை ஓய்ந்து உள்ளது.

ராகுல்காந்திதான் பிரதமர் என்று தி.மு.க. கூறிவிட்டது. சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, சரத்பவார் போன்றவர்களின் கட்சிகள் தேர்தலுக்கு முன்னால் வருகிறார்கள். கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரே அணியில் இருக்க முடியாது.

தேர்தலுக்கு பின்னால் கம்யூனிஸ்டு கட்சி பாரதீய ஜனதாவை ஆதரிக்காது. காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரிக்கும். தேர்தலுக்கு பின் அகிலேஷ், மாயாவதி கூட்டணி காங்கிரசைதான் ஆதரிக்கும்.

கூட்டணிக்கான கதவுகள் திறந்து இருப்பதாக மோடி சொல்லி இருந்தாலும் கதவை தாண்டி உள்ளே போகத்தான் ஆள் இல்லை. இந்தியாவிலும், தமிழகத்திலும் எந்தவொரு கட்சியும் மோடி அழைப்பை ஏற்று, படி தாண்டவில்லை. கதவை திறந்து வைத்தாலும், யாரும் உள்ளே போகவில்லை.

பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறி உள்ளன. சிவசேனா கட்சியுடன் யுத்தம் நடக்கிறது. தி.மு.க.–காங்கிரஸ், தோழமை கட்சிகளின் கூட்டணி மிக வலுவாக உள்ளது. உரிய நேரத்தில் எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிகள் என பேசப்படும்.

கோடநாடு விவகாரத்தில் குற்றச்சாட்டுகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியே வர சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். சட்டப்படி நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும்.

காவல்துறை விசாரிப்பதால் அவர் முதல்–அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வைக்கவேண்டும். அல்லது உயர்நீதிமன்ற பணியில் இருக்கும் நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story