பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா


பூந்தமல்லியில் திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா
x
தினத்தந்தி 17 Jan 2019 4:45 AM IST (Updated: 17 Jan 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த பூந்தமல்லி குமணன்சாவடி முருகப்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகள் ஆஷா (வயது 24). இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரும், அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ரவி என்பவருடைய மகன் வினோத்குமார் (24) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆஷா வற்புறுத்தினார். ஆனால் அதற்கு வினோத்குமார் மறுத்துவிட்டதாக தெரிகிறது. ஆஷாவின் பெற்றோர் திருமணம் குறித்து பேச தொடர்பு கொண்டபோது வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஆஷா, தனது காதலன் வினோத்குமார் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:–

நாங்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். முதலில் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். இதனால் நாங்கள் நெருக்கமாக இருந்ததால் ஒரு முறை கர்ப்பம் அடைந்தேன். வினோத்குமார் கூறியதால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன். பின்னர் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, மறுத்து விட்டார். என்னுடன் பேசுவதையும் புறக்கணித்தார்.

இதனால் வேறு வழியில்லாமல் பூந்தமல்லி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீஸ் விசாரணையின்போது 2 மாதம் கழித்து என்னை திருமணம் செய்துகொள்வதாக போலீசிடம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது திருமணம் குறித்து பேசுவதற்கு எனது குடும்பத்தினர் வினோத்குமார் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர். வினோத்குமாரும் என்னை திருமணம் செய்ய முடியாது என்று தற்போது கூறுகிறார். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் கூடிவிட்டனர். இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு ஆஷா அங்கிருந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story