அரசு தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல அனுமதி அதிகாரி தகவல்
பண்ணை சுற்றுலா திட்டத்தில் அரசு தோட்டகலை பண்ணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– உணவு உற்பத்தியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பயன்பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் தமிழகத்தில் பண்ணை சுற்றுலாத்திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 61 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக 23 தோட்டக்கலை பண்ணைகள், 2 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு பண்ணை சுற்றுலாத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக அரசு தோட்டக்கலை பண்ணைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பயிர்கள் குறித்தும், அதனை சாகுபடி செய்யும் நவீன முறைகள் பற்றியும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெறும் இந்த திட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு, தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடுகள், பயிர்சாகுபடி முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்யும் முறைகள் மற்றும் இயற்கை சார்ந்த தோட்ட அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ள இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் அரசு தோட்டக்கலை பண்ணைகளுக்கு வரும் பொதுமக்களுக்கும், மாணவ–மாணவிகளுக்கும் பண்ணையிலேயே இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்ற இயற்கையான பானங்கள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தோட்டக்கலை சார்பில் இலவசமாக ஒரு மரக்கன்றுவழங்கப்படும்.
எனவே பொதுமக்கள், மாணவ–மாணவிகள் தங்களது வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தையோ நேரில் அணுகி இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார.