பாலமேட்டில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு சிறப்பு பெற்றது.
மதுரை,
தை மாத பிறப்பான பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடந்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை என்பதால் மதுரை அவனியாபுரத்தில் விமரிசையாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலான குழுவை மதுரை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. அந்த குழுவின் வழிகாட்டுதலின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்டது.
மொத்தம் 641 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 476 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஜல்லிக்கட்டின் போது மாடு முட்டியதில் பார்வையாளர்கள், வீரர்கள், மாடு வளர்ப்போர் என 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனைத்தொடர்ந்து 2–ம் நாளான நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா, அங்குள்ள மஞ்சமலைசாமி கோவில் ஆற்று மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் கலந்துகொள்ள 988 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த காளைகள் அனைத்தும் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன் மேற்பார்வையில் உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட கால்நடை டாக்டர்கள், கால்நடை மருத்துவ துறையினர் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
காளைகளை அடக்க 843 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மஞ்ச மலைசாமி கோவில் மைதானம் அதிகாலை 5 மணியில் இருந்தே களை கட்டியது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் போட்டியை காண வந்தனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்கும் வீரர்கள் காயமடையாத வகையில் மைதானத்தில் தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதை தொடர்ந்து காலை 8 மணிக்கு போட்டியை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் வாடிவாசல் வழியாக கிராமத்து கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் சுற்றுகள் அடிப்படையில் போட்டி தொடங்கியது. சீருடை அணிந்த 100 மாடுபிடி வீரர்கள் முதலில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போட்டியில் உள்ள விதிமுறைகள் குறித்து கலெக்டர் விளக்கினார். அதை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்தும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் முண்டி அடித்து கொண்டு அதன் திமிலை பாய்ந்து பிடித்து தங்களின் வீரத்தை பறைசாற்றினார்கள். இதில் ஒரு சில காளைகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஆக்ரோஷமாக வெளியே வந்து சுற்றி இருப்பவர்களை மிரள வைத்ததுடன், யார் கையிலும் சிக்காமல் பாய்ந்து ஓடியன. அது போன்ற காளைகளை கண்ட வீரர்கள் சற்று ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் ஒரு சில காளைகளை பிடித்து தங்களின் வீரத்தை நிரூபித்து காண்பிக்க வேண்டும் என்று சில வீரர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டு கொண்டு அந்த காளைகளை அடக்கிய சம்பவங்களும் அரங்கேறியது. அவ்வாறு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், கிரைண்டர், மின்விசிறி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
அவிழ்த்து விடப்படாத காளைகள் அதிகமாக இருந்ததால் அரை மணி நேரம் தாமதமாக மாலை 4.30 மணிக்கு போட்டியை முடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியின் முடிவில் 567 காளைகளும், 739 வீரர்களும் களத்தில் இறங்கினார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் போட்டி நடைபெறும் பகுதியில் 2 அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 1,500–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ துணை இயக்குனர் டாக்டர் அர்ஜூன்குமார் மேற்பார்வையில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையில் 12 மருத்துவக்குழு மற்றும் ஒரு அறுவை சிகிச்சை குழுவும் அமைக்கப்பட்டு இருந்தது. 108 ஆம்புலன்சுகளும், கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் 2 கால்நடை ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இருந்தன. இவர்கள் போட்டியில் காயம் அடைந்த வீரர்களை உடனே அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த வீரர்களும், மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் செயல் அலுவலர் பூங்கொடி முருகு, துப்புரவு மேற்பார்வையாளர் கனகராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 50–க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் மத்திய அரசு விலங்குகள் நலவாரிய ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு தலைவர் டாக்டர் மிட்டல், தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, பேரூராட்சி முன்னாள் நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்கசாமி மடத்து கமிட்டி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் வேலு, பொருளாளர் மனோகரவேல்பாண்டியன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.