பிரதமரின் வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமையும் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
பிரதமரின் வருகை தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமையும் என மதுரையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மதுரை,
பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மதுரை பெருங்குடி அருகே உள்ள மண்டேலே நகரில் வருகிற 27–ந்தேதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:–
பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும், பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்காகவும் வருகிற 27–ந்ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி மதுரை வருகிறார். மோடியின் வருகை தமிழகத்திலும், தமிழக அரசியலிலும் ஒரு திருப்புமுனையாக அமையும். தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பதிலடியாக அமையும்.
கடந்த 4½ ஆண்டுகளில் பலமுறை மோடி தமிழகம் வந்திருக்கிறார். இந்த முறை பல திட்டங்களை செயல்படுத்துவதற்காக அவர் வருகிறார். இதுவரை தமிழகத்திற்கு பிரதமர் வந்த அனைத்து நிகழ்வுகளும் முக்கியமானவை.
காங்கிரஸ்– தி.மு.க. கூட்டணி அல்லாத, பிரதமர் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கப்படும். பிரதமரின் வருகைக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்திருப்பது சரியல்ல. நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது அதனை வரவேற்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து தேசிய செயலாளர் எச். ராஜா கூறும்போது, “தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கின்ற தீய சக்திகள் அனைத்தும் நீக்கப்படும். அதற்கு எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களை ஒழிக்க முடியும். யாருக்காவது தைரியம் இருந்தால் மோடி தமிழகத்திற்கு வரும்போது கருப்புக்கொடி காட்டட்டும். அப்படி கருப்பு கொடி காட்டுபவர்களை தமிழக மக்கள் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். அவர்கள் தமிழக மக்களிடம் ஓட்டு கேட்டு செல்ல முடியாது. எய்ம்ஸ் போன்ற நல்ல திட்டங்களை விரும்பாத நபர்கள் மட்டுமே கருப்புக்கொடி பற்றி பேசுவார்கள். கருப்புக் கொடி காண்பித்தால், எங்களிடம் காவிக்கொடி இருக்கிறது. தமிழகத்திற்கும் மோடி வருவது அரசியலில் திருப்புமுனையாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.