காணும் பொங்கலை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் மீன்கள் விற்பனை அமோகம்
காணும் பொங்கலை முன்னிட்டு மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்,
பொங்கல் பண்டிகைக்கு அடுத்தநாள் வரும் காணும் பொங்கலுக்கு கடல் சார்ந்த உணவு பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு காணும் பொங்கலையொட்டி கடல் சார்ந்த உணவு பொருட்களான மீன், இறால், நண்டு ஆகியவற்றை வாங்கி செல்ல அதிகாலையிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீன்மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்தனர். எப்போதும் பொங்கல் பண்டிகைக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் விலை கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்களால் பிடித்துவரப்பட்ட மீன்கள் விற்பனைக்கு வந்தது. இந்த மீன்களின் விலை எப்போதும் பொங்கல் பண்டிகைக்கு விற்பனை செய்யும் விலையை விட குறைந்த விலைக்கே விற்கப்பட்டது. இதனால் சற்று நேரத்திலேயே மீன்கள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு 1 கிலோ நண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.350-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 1 கிலோ சீலா மீன் ரூ.400- க்கு விற்கப்பட்டது, இந்த ஆண்டு ரூ.350-க்கு விற்கப்பட்டது. சென்ற வருடம் வெளியூரிலிருந்து மீன்கள் வாங்குவதற்காக மக்கள் இங்கு வந்தனர். ஆனால் இங்கு விலை கூடுதலாக இருந்ததால் மக்கள் மீன்களை வாங்காமலேயே திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் இந்த வருடம் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டதாலும், வழக்கத்திற்கு மாறாக மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததாலும் பொதுமக்கள் அதிகமாக மீன்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் மற்றும் நண்டு கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மந்திரிப்பட்டினம், மணமேல்குடி போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து வாங்கி செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகள் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அசைவ பிரியர்கள் மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை வாங்குவதற்காக கட்டுமாவடி வருகின்றனர். இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி மீன், நண்டு, இறால் வாங்குவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொது மக்கள் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மார்க்கெட்டில் பாறை, வவ்வால், ஓரா, திருக்கை, தாழஞ்சிரா, செங்கனி, முரல், இறால், நண்டு, கணவாய் ஆகியவற்றின் வரத்து அதிகமாக இருந்தது. சாதாரண நாட்களில் ரூ.250 முதல் 300 வரை விற்பனையான ஒரு கிலோ இறால் ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. ஒரு கூறு செங்கனி ரூ.200 முதல் ரூ.250, 300 வரையும், ஒரு கிலோ நண்டு ரூ.250 முதல் ரூ.350, 400 வரையிலும் விற்பனையானது.
இதே போல மற்ற மீன் வகைகளும் ரூ.100 முதல் ரூ.150 வரை விலை அதிகரித்து காணப்பட்டது. மீன், நண்டு, இறால் ஆகியவை நல்ல விலைக்கு ஏலக்கடைகளில் விலை போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களை வாங்க வந்த மக்கள் அறந்தாங்கி சாலையின் இருபுறமும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தியதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
Related Tags :
Next Story