அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் வினோத பொங்கல் விழா


அன்னவாசல் அருகே மெய்வழிச்சாலையில் வினோத பொங்கல் விழா
x
தினத்தந்தி 17 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் வினோத பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அன்னவாசல்,

நாட்டில் நடக்கும் அனைத்து விதமான விழாக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் கொண்டாடும் படியாக இருக்கும். ஆனால் தை திருநாளான பொங்கல் பண்டிகை மட்டுமே தமிழர்களின் திருநாளாக அனைத்து மதம் மற்றும் சாதியினர் கொண்டாடும் விழாவாக இருப்பதால் இது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலை விளங்குகிறது.

அனைத்து மதம் மற்றும் சாதியினர் ஒற்றுமையாக விளங்க வேண்டும். இறந்த பிறகு அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மன் நரகம் மற்றும் சொர்க்கத்திற்கு அனுப்புவார் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் மெய்வழிச்சாலை என்பது தொடங்கப்பட்டது என கூறுகின்றனர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதற்கு இணங்கவும் மெய்வழிச்சாலை கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதத்தை பிரிக்காமலும் 69 சாதியினரும் சாதி மத பேதமின்றி வசித்து வருகின்றனர். இங்குள்ள சத்ய தேவ பிரம்ம குலத்தின் பொன்னுரங்கன் தேவாலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இவர்கள் ஒன்றுகூடி சமத்துவ பொங்கலாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இங்கு வருடம் தோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மெய்வழிச்சாலையில் இந்த ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொன்னுரங்கன் தேவாலயத்தில் சாலை ஆண்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன் பின்னர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெய்வழிச்சாலையில் வசித்து வரும் 69 சமூகத்தினரும், இன பாகுபாடின்றி தமிழர்களின் பாரம்பரிய உடையான பஞ்ச கச்சை, தலை பாகை அணிந்து அங்கிருந்து புனிதநீரை பெற்று தங்களது பொங்கல் பானையில் ஊற்றினர். பின்னர் மெய்வழிச்சாலை பொன்னுரங்கன் தேவாலயத்திலிருந்து தீபந்தத்தை ஊர்வலமாக எடுத்து வந்து அங்குள்ள கொடிமரத்தை 3 முறை சுற்றி வந்த பிறகு தீப்பந்தத்தை மேலே காட்டினர். அதன் பின்னர் அங்கிருந்த அனைவரும் தங்களது பொங்கல்பானை அடுப்பை மூட்டி பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

தமிழகத்தில் பல பகுதியிலிருந்து வந்திருந்த 69 சமூகத்தை சேர்ந்த 5000-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி வினோத பொங்கல் விழா நடத்தி சிறப்பாக கொண்டாடியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.


Next Story