அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம்


அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 9:15 PM GMT)

அணைக்கட்டில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு,

அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடந்தது. விழாவை வேலூர் சப் -கலெக்டர் மெகராஜ் தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் (கலால்) பூங்கொடி, தாசில்தார் ஹெலன்ராணி, பால்வளத்தலைவர் வேலழகன், மண்டல துணை தாசில்தார் பன்னீர் செல்வம், அணைக்கட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, சரவணன், கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன், இன்பக்குமார், பரத் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு கால்நடை மருத்துவர் ஹரீஷ் தலைமையில் மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்தனர். வாணியம்பாடி, வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கோவில் மீதும் மாடிவீடுகளின் மீதும் அமர்ந்து காளைகள் ஓடுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

இளைஞர்களின் ஆரவாரத்தில் மாடுகள் மிரண்டு தெருவில் குறுக்கு நெடுக்குமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை மாடுகள் முட்டியது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்களுக்கு காளை விடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் கைலாஷ் சாந்தினி மற்றும் சுகாதார குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காளை விடும் திருவிழாவில் வேகமாக ஓடியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து 8 காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. காளை விடும் விழா காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்தது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை அணைக்கட்டு விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story