மாவட்டத்தில் தனித்தனி விபத்தில் 8 பேர் பலி


மாவட்டத்தில் தனித்தனி விபத்தில் 8 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 9:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தனித்தனி விபத்தில் 8 பேர் பலியாகினர்.

விழுப்புரம்,

மயிலத்தை அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ் மகன் சரவணன் (வயது 30), ரெயில்வே ஊழியர். இவர் மயிலம் மெயின்ரோட்டில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற அரசு பஸ், சரவணன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செஞ்சி அருகே உள்ள அத்தியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). இவர் தனது மொபட்டில் நல்லாண்பிள்ளைபெற்றால் அருகே உள்ள புத்தகரம் கிராத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து அத்தியூருக்கு புறப்பட்டார். சத்திமங்கலம் அருகே வந்தபோது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச்சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மரக்காணத்தை அடுத்த கிளாப்பாக்கத்தை சேர்ந்தவர் திருஞானம் (45), விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து மரக்காணம் நோக்கி வந்துகொண்டிருந்தார். கூனிமேடு அருகே வந்தபோது சாலையோர தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே திருஞானம் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மகன் மாயக்கண்ணன் (25). இவர் மும்பையில் கூலி வேலை செய்து வந்தார். பொங்கல் பண்டிகைக்காக இவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கண்ணபிரானுடன் (19) ஒரு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து நகர் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்தனர். நகர் ரெயில்வே மேம்பாலத்தில் இவர்கள் அதிவேகத்தில் சென்றதால் எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாயக்கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கண்ணபிரான், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் உளுந்தூர்பேட்டைக்கு புறப்பட்டது. வேனை உளுந்தூர்பேட்டை அருகே கிள்ளனூரை சேர்ந்த டிரைவர் சுனில்குமார் (29) ஓட்டினார். இவருடைய நண்பர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திவாகர் (24) கிளனராக இருந்தார். இந்த வேன் விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக பால் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். திவாகர் மற்றும் ஆம்னி பஸ் டிரைவரான கும்பகோணம் அருகே ஏராகரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, பஸ் பயணிகளான புதுச்சேரியை சேர்ந்த பிரான்சிஸ், திருவிடைமருதூர் வினோத், தூத்துக்குடி முருகன் ஆகிய 5 பேர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் விழுப்புரத்தை அடுத்த மாங்குப்பம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான விநாயகமூர்த்தி (42) என்பவர் அங்குள்ள சர்வீஸ் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனே அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

சங்கராபுரம் அருகே உள்ள கல்லேரிகுப்பத்தை சேர்ந்த கோபால் மகன் கோவிந்தன் (21). இவரும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் பிரசாந்த் என்பவரும், ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கராபுரத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து கல்லேரிகுப்பத்திற்கு வந்துகொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கோவிந்தன் ஓட்டினார். சோழம்பட்டு பிரிவு சாலை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. அந்த மாட்டின்மீது மோதாமல் இருப்பதற்காக கோவிந்தன், ‘பிரேக்’ போட்டார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கோவிந்தன் பலத்த காயமடைந்தார். பிரசாந்த் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து படுகாயமடைந்த கோவிந்தனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தன் இறந்தார்.

இந்த விபத்துகள் குறித்து மயிலம், சத்தியமங்கலம், மரக்காணம், உளுந்தூர்பேட்டை, வளவனூர், விக்கிரவாண்டி, சங்கராபுரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story