விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்ம சாவு


விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்ம சாவு
x
தினத்தந்தி 18 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 9:40 PM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் சினிமா துணை இயக்குனர் மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், திருவேங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் வினிகிளாட்சன்(வயது 35). சினிமா துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்து கொண்டு, தற்போது விளம்பர படங்களையும் எடுத்து வந்தார். இவருடைய மனைவி அனிவிமலா(34). இவர்களுக்கு நிரலயா(4) என்ற மகள் இருக்கிறாள்.

நேற்று முன்தினம் இரவு வினிகிளாட்சன் தனது மனைவி மற்றும் மகளுடன் சாப்பிட்டார். பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். வினிகிளாட்சன் மட்டும் தனி அறையில் படுத்து தூங்கினார்.

நேற்று காலையில் எழுந்த அனிவிமலா, தனி அறையில் படுத்து தூங்கிய தனது கணவரை தட்டி எழுப்பினார். ஆனால் நீண்டநேரம் எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. உடல் அசைவற்ற நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிவிமலா, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வினி கிளாட்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார், வினிகிளாட்சன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிகிளாட்சன், மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story