ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் விழா கொண்டாட்டம் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்


ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் விழா கொண்டாட்டம் பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 18 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் வ.உ.சி. பூங்காவில் குவிந்த பெண்கள் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு,

தமிழகம் முழுவதும் நேற்று காணும் பொங்கல் விழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். அதேபோல் ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆண்களில் தாயார் அல்லது சகோதரிகளுடன் வந்த 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காணும்பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே கூடி உற்சாகமாக கொண்டாடும் இடமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா உள்ளது.

தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த வழக்கம் நேற்றும் கடைபிடிக்கப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை முதல் வ.உ.சி. பூங்கா மற்றும் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நுழைவு வாயில்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். பூங்காவின் உள் பகுதியில் வழக்கமாக நடத்தப்படும் தள்ளுவண்டி கடைகள் அனுமதிக்கப்படவில்லை. வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. காலை 10 மணி முதல் பெண்கள் உற்றார் சுற்றத்தாருடன் வரத்தொடங்கினார்கள். கைகளில் கரும்பு, பலகாரம் உள்ளிட்ட பொருட்களுடன் பூங்காவுக்குள் நுழைந்து தங்களுக்கான இடத்தை பிடித்துக்கொண்டனர்.

பிற்பகல் 3 மணி அளவில் பெண்களின் வருகை அதிகரித்தது. ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை பூங்கா நுழைவு வாயில்வரை கொண்டு வந்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

மாலையில் பூங்கா முழுவதும் பெண்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கைக்குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை வயது வித்தியாசமின்றி பூங்கா, பெண்களால் நிரம்பியது.

சிலர் தங்கள் பகுதிகளை சேர்ந்த பெண்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வந்து காணும் பொங்கலை கொண்டாடினார்கள். உற்றார், உறவினர்களை சந்தித்தும், தோழிகள், தெரிந்தவர்களை பார்த்து நலம் விசாரித்தும் மகிழ்ந்தார்கள்.

கபடி, கண்ணாமூச்சி, கோலாட்டம், நொண்டியடித்தல் என்று பெண்கள் தங்களுக்குள் பல போட்டிகள் நடத்தி விளையாடினார்கள். பாடல் திறமை கொண்டவர்கள் சினிமா பாடல்களை பாடி ஒலிபெருக்கியில் பாடினார்கள். அதற்கு ஏற்ப சிலர் நடனம் ஆடினர்.

பள்ளி-கல்லூரி மாணவிகளுக்கு நிகராக குடும்ப தலைவிகளும் குத்தாட்டம் போட்டு அசத்தினார்கள். மேள தாளங்கள், மைக் செட்டுகளுடன் வந்து திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பியும், அதற்கேற்ப நடனங்கள் ஆடியும் கொண்டாடினர்.

சிலர் குழுவாக கோலாட்டம் ஆடியும், பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தியும், தங்கள் விருப்பம்போல விளையாடினார்கள். சிறு குழந்தைகளுக்கு போட்டியாக இளம் பெண்களும் குடும்ப தலைவிகளும், மூதாட்டிகளும் பந்துகளை தட்டி ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பெரியவலசு பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகை என்றாலே வ.உ.சி. பூங்காவில் கொண்டாடும் காணும்பொங்கல் விழாதான் எனக்கு நினைவுக்கு வரும். ஆண்டுதோறும் தவறாமல் வந்து கலந்துகொள்கிறேன். எங்கள் பகுதி பெண்கள் அனைவரும் ஆர்வமாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம். எத்தனை பண்டிகைகள் வந்தாலும் காணும்பொங்கல் போன்று இருப்பதில்லை. இங்கே ஆண்கள் யாரும் இல்லை. எனவே எந்த கவலையுமின்றி நாங்கள் விரும்பியபடி பாட்டுப்பாடியும், நடனம் ஆடியும் கொண்டாடுகிறோம்’ என்றார்.

முனிசிபல் காலனியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கூறும்போது, ‘எங்களுக்குள்ளும் சில ஆசைகள் இருக்கும். சில நேரங்களில் சந்தோஷமாக கத்த வேண்டும் என்று தோன்றும். மனதுக்கு இதமாக மகிழ்ச்சியுடன் நடனம் ஆட வேண்டும் என்று நினைத்தாலும் குடும்ப பெண்ணாக வீடுகளில் அது சாத்தியமில்லை. ஆனால் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படாததும், எங்களை போன்ற உணர்வுள்ள பெண்கள் அதிகமாக கூடுவதாலும் கவலைகளை மறக்க சிறந்த இடமாக உள்ளது’ என்றார்.

பெண்கள் பலர் குழந்தைகளை போல பலூன்களை வைத்து விளையாடினார்கள். இளம் பெண்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், மரத்திற்கு அடியில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர். போலீசார் சார்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி மகிழ்ந்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Next Story