மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 71 பேர் காயம்


மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 71 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2019 11:25 PM GMT (Updated: 17 Jan 2019 11:25 PM GMT)

மணப்பாறையை அடுத்த ஆவாரங்காட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 71 பேர் காயமடைந்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் தடுப்பு வேலிகள், கேலரி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னர், அவை அனுமதிக்கப்பட்டன. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து, முழு உடல் தகுதி உள்ள வீரர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய ஊர்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டு வாடிவாசல் முன்பு நிறுத்தப்பட்டன. திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், சப்-கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

முதலில் கோவில் காளைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் களத்தில் சீறிப்பாய்ந்தன. பின்னர் மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஆக்ரோஷமாக பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள், வீரர்களை பந்தாடின. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளருக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் ஹெல்மெட், கட்டில், மிக்சி, சில்வர் பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, கடிகாரம், பிளாஸ்டிக் பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் 554 காளைகள் களம் கண்டன. 247 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வீரர்கள் ஒவ்வொரு குழுவாக அனுப்பி களம் இறக்கப்பட்டனர். காளைகள் முட்டியதில் 39 பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 20 பேர், 12 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 71 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் சுழல் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் ஆம்புலன்ஸ் வேன்கள், தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

Next Story