குடிநீர் தொட்டி வால்வு உடைந்து புனே நகரில் திடீர் வெள்ளம்
குடிநீர் தொட்டியின் வால்வு உடைந்ததால் புனே நகரில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சாலையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் பரபரப்பு உண்டானது.
புனே,
புனே சின்ஹகாட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ராட்சத குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் உள்ள வால்வு நேற்று காலை திடீரென உடைந்தது. இதன் காரணமாக குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.
காட்டாற்று வெள்ளம் போல் இரைச்சலுடன் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. சாலையில் திடீரென வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அச்சமும், பீதியும் அடைந்தனர்.
அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் பயத்தில் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. இதற்கிடையே, குடிநீர் தொட்டி வால்வு உடைந்தது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சியினர் அங்கு சென்று உடைந்த பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் கழித்து உடைப்பை சரி செய்தனர். இதன்பின்னர் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்தது.
குடிநீர் தொட்டி வால்வு உடைந்து சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம் முக்தா கால்வாய் கரை உடைந்து நகரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story