6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்


6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்
x
தினத்தந்தி 17 Jan 2019 11:52 PM GMT (Updated: 17 Jan 2019 11:52 PM GMT)

சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஜெயில் சின்னாத்தேவர் என்று பெயர் வந்தது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே உள்ள கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி. சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஜெயில் சின்னாத்தேவர் என்று பெயர் வந்தது. இவருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உண்டு. இந்த வாரிசுகள் வெளிநாடு, வெளியூர்களில் ஆங்காங்கே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் ஜெயில் சின்னத்தேவரின் வாரிசுகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, உறவை மேம்படுத்தும் வகையில் ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர். அதன்படி காணும் பொங்கல் அன்று ஜெயில் சின்னாத்தேவரின் வாரிசுகள் 6 தலைமுறையினர் அனைவரும் உசிலம்பட்டியில் ஒரு மண்டபத்தில் ஒன்றுகூடினர்.

முதலில் அவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து ஒருவொருவர் தங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெயில் சின்னாத்தேவரின் கடைசி மகனான ராசுத்தேவர் (வயது 97) மேடையில் நின்று அவரின் வாரிசுகளை வாழ்த்தி ஆசி வழங்கினார். அவர் கூறுகையில், எனது தந்தையின் 6 தலைமுறையை சேர்ந்த 361 வந்துள்ளனர். இப்படி எனது பேர பிள்ளைகளை ஒன்றாக நான் பார்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஆனால் இன்று அனைவரையும் ஒரே இடத்தில் பார்த்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி உறவுகளை வளர்த்துக் கொண்டால் ஏதாவது ஒரு வழியில் உறவுகள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கும். மேலும் முதியோர் இல்லம், ஆனாதை ஆசிரமம் போன்றவை குறைந்து விடும் என்றார்.

கண்ணுக்கு தெரியாத ஊர்களில் வசித்து வந்த உறவினர்கள் ஒன்றுகூடிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் இலங்கை, அந்தமான், சீனா போன்ற நாடுகளில் வசித்து வருபவர்களும், சென்னை, பெங்களூரு, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

Next Story