பெங்களூரு மாநகராட்சியில் 12 நிலைக்குழு தலைவர்கள் ஒருமனதாக தேர்வு


பெங்களூரு மாநகராட்சியில் 12 நிலைக்குழு தலைவர்கள் ஒருமனதாக தேர்வு
x
தினத்தந்தி 18 Jan 2019 5:32 AM IST (Updated: 18 Jan 2019 5:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியில் பா.ஜனதா புறக்கணிப்பு செய்ததால் 12 நிலைக்குழு தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள 12 நிலைக்குழுக்கள் உள்ளன. இந்த நிலைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த உறுப்பினர்கள் வாக்களித்து தங்கள் நிலைக்குழுக்களுக்கான தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மட்டும் தள்ளி சென்றது.

இந்த நிலையில் 12 நிலைக்குழுக்களின் தலைவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று பெங்களூரு மாநகராட்சியில் நடந்தது. இதனால் அங்கு நிலைக்குழு உறுப்பினர்கள் வருகை தந்தனர். அப்போது, மேயர் கங்காம்பிகே கே.எம்.சி. சட்டத்தை மீறி தேர்தல் நடத்த முயற்சிக்கிறார் என்று பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினர்.

மேலும், மாநகராட்சி மேயர் கங்காம்பிகே அறையில் வைத்து நடந்த நிலைக்குழு தலைவர்கள் தேர்தலை பா.ஜனதா உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதைதொடர்ந்து தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் தேர்தலில் கலந்துகொண்டனர்.

பெங்களுரு மாநகராட்சியில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தேர்தலை புறக் கணித்ததால் 12 நிலைக்குழுக்களுக்கான தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவராக ஹேமலதா கோபாலய்யா (விருஷபாவதி நகர் வார்டு), வார்டு அளவிலான பணி நிலைக்குழு தலைவராக உமேசல்மா (குசால்நகர்), கல்வி நிலைக்குழு தலைவராக இம்ரான் பாஷா (பாதராயனபுரா), தோட்டம் நிலைக்குழு தலைவராக ஐஸ்வர்யா (பின்னிபேட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மேலும், கணக்கு நிலைக்குழு தலைவராக ேவலுநாயக்கர் (லட்சுமிதேவிநகர்), நகர திட்டம் மற்றும் அபிவிருத்தி நிலைக்குழு தலைவராக நாகராஜ் (விஞ்ஞானநகர்) பெரிய பணி நிலைக்குழு தலைவராக லாவண்யா கணேஷ் (லிங்கராஜபுரா), சமூகநலன் நிலைக்குழு தலைவராக சவுமியா (சாந்திநகர்), மேல்முறையீட்டு நிலைக்குழு தலைவராக சுஜாதா ரமேஷ் (ஆஜாத் நகர்), மார்க்கெட் நிலைக்குழு தலைவராக பரிதா இஸ்மாயில் (சிவாஜி நகர்) ஆகியோரும் தேர்வானார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.

சுயேச்சை கவுன்சிலர்களான ஆனந்த் குமார் (ஒய்சாலா நகர்) பணியாளர் மற்றும் நிர்வாக நிலைக்குழு தலைவராகவும், முஜாஹித் பாஷா (சித்தாபுரா) பொது சுகாதார நிலைக்குழு தலைவராகவும் தேர்வாகி உள்ளனர்.

இந்த தகவலை பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் நிலைக்குழுக்களுக்களின் தலைவர்களாக தேர்வானவர்களுக்கு மேயர் கங்காம்பிகே, ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ., ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடக மேல்-சபை உறுப்பினர் டி.ஏ.ஷரவணா, கவுன்சிலர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story