முத்தாண்டிப்பாளையத்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்


முத்தாண்டிப்பாளையத்தில் தினமும் வராத நகர பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Jan 2019 3:45 AM IST (Updated: 18 Jan 2019 7:56 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே உள்ள முத்தாண்டிபாளையத்திற்கு தினமும் வராத அரசு நகர பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பல்லடம்,

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம், ஆறாக்குளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளுக்கு அரசு நகர பஸ்கள் தினமும் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் வேலைக்கு பனியன் நிறுவன தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் உள்ள சி.டி.சி. போக்குவரத்து அலுவலக பணிமனையில் பொதுமக்கள் மனுக்கொடுத்து தினமும் முத்தாண்டிபாளையத்திற்கு நகர பஸ்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகர பஸ் முத்தாண்டிபாளையத்திற்கு வருவதில்லை. இந்த நிலையில் திடீரென அரசு நகர பஸ் ஒன்று நேற்றுகாலை வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த நகர பஸ்சை சிறைபிடித்து தினமும் ஏன் பஸ் ஊருக்குள் வருவதில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த நகர பஸ்சின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்.மேல் அதிகாரிகள் உத்தரவிட்டால்தான் முத்தாண்டிபாளையத்திற்கு தினமும் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்கள். இதனை ஏற்காத பொதுமக்கள் நீண்டநேரம் அங்கேயே காத்து நின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துறை கிளைமேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிளை மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் முத்தாண்டிபாளையத்திற்கு நகர பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story