ஆம்புலன்ஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்: கூட்டுறவு வங்கி நகை மதிப்பீட்டாளர் சாவு நண்பர் காயம்
கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் கூட்டுறவு வங்கி நகைமதிப்பீட்டாளர் பரிதாபமாக பலியானார்.
கடையம்,
கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் கூட்டுறவு வங்கி நகைமதிப்பீட்டாளர் பரிதாபமாக பலியானார். நண்பர் காயம் அடைந்தார்.
நகை மதிப்பீட்டாளர்கடையம் அருகே முதலியார்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கடையத்தில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிராமகிருஷ்ணன் என்ற ராஜா ( வயது 24). இவர் கீழக்கடையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பலவேசம் மகன் ஆறுமுகம் (27). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் கடந்த வாரம் பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரும் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள்.
பரிதாப சாவுஇந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ராஜாவும், ஆறுமுகமும் மோட்டார்சைக்கிளில் பொட்டல்புதூர் சென்று சாப்பாடு வாங்கி விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது முதலியார்பட்டி ரஹ்மத் நகர் வளைவு பகுதியில் வந்த போது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா இருவரும் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த காயம் அடைந்திருந்த ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
ஆம்புலன்ஸ் பறிமுதல்இதுகுறித்து ஆறுமுகம் கடையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் ஆம்புலன்ஸ் பாவூர்சத்திரத்திலிருந்து ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தில் நோயாளியை அழைத்து செல்ல வந்ததும், அதை சேர்ந்தமரத்தை அடுத்த அரியநாயகிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வெள்ளத்துரை என்பவர் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்புலன்ஸ் மோதி நகைமதிப்பீட்டாளர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.