பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
பொது வினியோக திட்ட முகாம்பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (ஜனவரி) சிறப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்க உள்ளது. இந்த முகாம் அந்தந்த தாலுகாக்களில் தாசில்தார் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க உள்ளது.
முகாமில், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் பொது வினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
மேற்பார்வை அலுவலர்கள்தூத்துக்குடி தாலுகாவிற்கு தூத்துக்குடி உதவி கலெக்டரும், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாக்களுக்கு தூத்துக்குடி தனித்துணை கலெக்டரும் (சமூக பாதுகாப்பு திட்டம்), திருச்செந்தூர் தாலுகாவிற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டரும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், கோவில்பட்டி தாலுகாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டரும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டயபுரம் தாலுகாவிற்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளரும் (நிலம்), கயத்தாறு தாலுகாவிற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.