அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அனுமதிக்காத காளைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதிக்காததை கண்டித்து, காளைகளுடன் வந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. அதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யப்பட்டிருந்த காளைகளில், 729 காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டன. நேரம் பற்றாக்குறை காரணமாக மீதமுள்ள காளைகளை அவிழ்க்க முடியவில்லை.
இந்தநிலையில் அலங்காநல்லூரின் தாய்கிராமம் என்று அழைக்கப்படும் குறவன்குளத்தில் 25– க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. ஆண்டு தோறும் இந்த காளைகளுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள முன்னுரிமை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் காளைகளுக்கான டோக்கன்கள் வழங்கியும், போலீசார் வாடிவாசலில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையொட்டி நேற்று குறவன்குளம் கிராம மக்கள் அங்குள்ள மந்தை திடலில் 20–க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இனிவரக்கூடிய காலங்களில் வாடிவாசலுக்குள் அனுமதிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.