தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கிடந்த புள்ளி மான்
தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் நேற்று புள்ளி மான் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி ஒத்தப்பட்டி கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் மான் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மீனவர்கள் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த அந்த புள்ளி மானை பார்வையிட்டு அதன் நீளம், உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இறந்து கிடந்த புள்ளி மானானது சுமார் 20 கிலோ எடை இருந்தது. அந்த மானுக்கு 2 வயது இருக்கலாம் எனவும், ஆண் இனத்தை சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது.
மேலும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியை சுற்றியுள்ள சவுக்கு காட்டுப்பகுதிகளுக்குள் புள்ளி மான்கள் நடமாட்டம் எதுவும் கிடையாது. திசை மாறி இந்த புள்ளி மான் தனுஷ்கோடி பகுதிக்கு வந்து இருக்கும். தாகம் தீர்க்க கடல்நீரை குடித்ததில் இறந்து இறக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தனுஷ்கோடி கடற்கரையில் புள்ளிமான் ஒன்று இறந்து நிலையில் கிடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.