மேலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் பி.எட். பட்டதாரி பெண் தற்கொலை 9 மாத குழந்தை பரிதவிப்பு


மேலூர் அருகே கணவர் இறந்த துக்கத்தில் பி.எட். பட்டதாரி பெண் தற்கொலை 9 மாத குழந்தை பரிதவிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2019 4:30 AM IST (Updated: 18 Jan 2019 8:29 PM IST)
t-max-icont-min-icon

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் பி.எட். பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவருடைய 9 மாத குழந்தை பரிதவிக்கிறது.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாச்சம்பட்டியை சேர்ந்தவர் குருசேவ். அவருடைய மகள் ரேகா (வயது26). பி.எட். பட்டதாரி. இவருக்கும் உறவினரான சிட்டம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ராஜேஸ்குமார் மதுரையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த தம்பதியினருக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 6–ந் தேதி உடல்நலக்குறைவால் ராஜேஸ்குமார் இறந்து போனார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் சோகமாகவே ரேகா இருந்துள்ளார்.

இதற்கிடையில் வாச்சம்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு ரேகா வந்தார். சோகமாக இருந்த அவருக்கு ஆறுதல் கூறி உறவினர்கள் தேற்றினர். இந்த நிலையில் அவர் தனது உடலில் மண்ணெணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் தீயை அணைத்தனர்.

உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேகாவை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் சிகிச்சை பலனின்றி ரேகா பரிதாபமாக இறந்துபோனார்.

கணவர் இறந்த துக்கத்தில் பி.எட். பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவருடைய 9 மாத குழந்தை பெற்றோரை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story