அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு முறை: என்ஜினீயரிங் மாணவர்கள் போராட்டம்


அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு முறை: என்ஜினீயரிங் மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 6:43 PM GMT)

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்ஜினீயரிங் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோரிக்கைகளை ஆராய குழு அமைக்கப்படும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான தேர்வு முறையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்தது.

பழைய விதிமுறையின்படி, முதல் பருவ தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்த பாடங்களை (அரியர்) 2-வது பருவ தேர்வில் மறுபடியும் எழுத முடியும். ஆனால், புதிய விதிமுறையின் அடிப்படையில் மாணவர்கள் முதல் பருவ தேர்வில் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை மூன்றாவது பருவ தேர்வில் தான் எழுத முடியும்.

அதேபோல 2-வது பருவத் தேர்வில் மாணவர்கள் ‘அரியர்’ வைத்திருந்தால் அதனை 4-வது அல்லது 6-வது பருவத் தேர்வில் தான் எழுத முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையால் ‘அரியர்’ தேர்வுகளை எழுத மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், என்ஜினீயரிங் படிப்புக்கான ஆண்டு முடித்த பின்னரும் ‘அரியர்’ இருந்தால் அதனை எழுதி தேர்ச்சி பெறுவதற்கு கூடுதல் காலம் செலவிடப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் புதிய தேர்வு விதிமுறைகளை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் மற்றும் பேராசிரியர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாணவர்கள் தரப்பினர், தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமாரிடம் வழங்கினார்கள். கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும், நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் பதிவாளர் குமார், மாணவர்களிடம் எடுத்துக்கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

முன்னதாக பதிவாளர் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேர்வு தொடர்பான புதிய விதிமுறை முடிவு இப்போது எடுக்கப்பட்டது அல்ல. முன்பே எடுக்கப்பட்டது. புதிய விதிமுறை மற்றும் அதன் நோக்கம் பற்றி மாணவர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை. முடிந்த அளவுக்கு அதுபற்றி நாங்கள் விளக்கமாக சொல்கிறோம். அனைத்து கல்லூரிகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் உள்ளது. புதிய விதிமுறையை மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு ஆராய்வதற்கு, 10 நாட்களுக்குள் ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தான் முடிவு எடுக்கமுடியும்.

புதிய விதிமுறையின்படி (சாய்ஸ் பேஸ்ட் கிரெடிட் சிஸ்டம்) மாணவர்கள் அவர்களுடைய பாடத்திட்டத்துக்கு தேவையான வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். மேலும் ஒரு பாடத்தை விரைவாக படித்து முடிக்கலாம். 4-வது வருடம் அவருக்கு விருப்பம் உள்ள பாட்டத்திட்டத்திலும் சேர்ந்து படிக்கலாம்.

ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் மாணவர், எலக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். இது புதிய விதிமுறையிலேயே சாத்தியம். இதையும் தாண்டி அவர்கள் ‘அரியர்’ என்பதை நினைத்தே வருத்தப்படுகிறார்கள். எனவே நாங்கள் இந்த திட்டம் பற்றி விரிவாக அவர்களிடம் தெளிவாக எடுத்துக்கூற விரும்புகிறோம். கல்லூரி முதல்வர்களும் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். இது தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டுள்ள விதிமுறை தான். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story