மாவட்டம் முழுவதும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 18 ஊர்களில் மருத்துவ முகாம்


மாவட்டம் முழுவதும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 18 ஊர்களில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:15 PM GMT (Updated: 18 Jan 2019 7:00 PM GMT)

மாவட்டம் முழுவதும் 18 ஊர்களில் சுகாதாரத்துறை சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்காக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வரத் தொடங்கி விட்டனர். அதிலும் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் நத்தம் சாலை, மதுரை சாலை, திருச்சி சாலை, தாராபுரம் சாலை, கரூர் சாலை என அனைத்து சாலைகளிலும் காலை, மாலை நேரங்களில் பாதயாத்திரை பக்தர்களின் அணிவகுப்பை காணமுடிகிறது. அதிலும் நத்தம், திண்டுக்கல் வழியாக பழனிக்கு அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். ஆனால், கடுமையான பனிப்பொழிவு காரணமாக பாதயாத்திரை பக்தர்கள் திடீர் உடல்நலக்குறைவால் சிரமப்படுகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி நத்தம் சமுத்திராபட்டி முதல் பழனி அருகேயுள்ள ஆயக்குடி வரை மொத்தம் 18 ஊர்களில் மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. இதில் பக்தர் களுக்கு கால் வீக்கம், கொப்பளங்கள், காய்ச்சல், இருமல், உடல்வலி ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ராமையன்பட்டி பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை திண்டுக் கல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பக்தர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கினார். மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story