எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு ஜாக்டோ– ஜியோ ஆர்ப்பாட்டம்
எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ– ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பதை கண்டித்தும், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரில் ஜாக்டோ–ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி கோவை மாவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஜாக்டோ–ஜியோ மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சில பெண் நிர்வாகிகள் திடீரென கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
தமிழகத்தில் 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைப்பட உள்ளது. இதன் மூலம் 3,500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். மேலும் அந்த தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்களின் பணியிடங்கள் முற்றிலும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகிறது.
மேலும் புதிதாக நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதனால் அவர்களுக்கு பணி மற்றும் ஊதிய பாதுகாப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆர். தொடக்க கல்வித்துறையை தனியாக பிரித்து, தனி அலுவலர்களை நியமித்து அதிகார பகிர்வுக்கு வழி வகுத்தார். ஆனால் தற்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது நிர்வாக சீர்கேடுக்கும், அதிகாரத்துக்கும் மட்டுமே வழிவகுக்கிறது.
இந்த முடிவால் ஆசிரியர்களையும், சத்துணவு பணியாளர்களையும் பாதிப்பதோடு கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் கல்வி உரிமையை பறிக்கும் நடவடிக்கையாக அமையும். எனவே இதுபோன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட வேண்டும். இதனை தொடர்ந்து வருகிற 21–ந் தேதி முதல் காலவறையற்ற போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் ஜாக்டோ– ஜியோ ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், மாநில செய்தி தொடர்பு அலுவலர் மைக்கேல்ராஜ், அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் நீலகிரி மாவட்ட ஜாக்டோ–ஜியோ சார்பில் ஊட்டில் பிங்கர் போஸ்ட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் அண்ணாதுரை, பிராங்லின், ஆஸ்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.