திராவிடர் கழகம் சார்பில் எருமை மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாட்டம்
தாராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் எருமை மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
தாராபுரம்,
தாராபுரத்தில் மாட்டு பொங்கலையொட்டி, திராவிடர் கழகத்தின் சார்பில், எருமை மாடுகளுக்கு பொங்கல் வைத்து, ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக தாராபுரம் வடதாரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் சங்கர், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் மதிபெரியார்நேசன், இளஞ்செழியன், ராஜேஷ், கேசவன், அழகன், தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக எருமை மாடுகளை குளிக்கவைத்து, அவைகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மாலை அணிவித்து, பொதுமக்கள் கூடும் மைதானத்திற்கு எருமை மாடுகள் அழைத்து வரப்பட்டது. அங்கு கூடியிருந்த பெண்கள் புதுப்பானையில் பொங்கல் வைத்தார்கள். பானை பொங்கியபோது பெண்கள் குலவு சத்தமிட்டனர். கூடியிருந்தவர்கள் ‘‘பொங்கலோ.. பொங்கல்’’ என்று கூவி, மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்கள். பொங்கல் வைத்து முடிந்ததும். எருமை மாடுகளுக்கு பொங்கலை கொடுத்து சாப்பிட வைத்தனர்.
அதன் பிறகு எருமைமாடுகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலமானது வடதாரையிலிருந்து புறப்பட்டு பூளவாடிரோடு மற்றும் நாடார்தெரு வழியாக சென்று புறவழிச்சாலையை அடைந்தது. எருமை மாட்டுப் பொங்கல் குறித்து திராவிடர் கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம் கூறியதாவது:–
மனிதர்களை எவ்வாறு வருணம் பிரித்து பார்த்தார்களோ, அதுபோன்றுதான் விலங்குகளிலும் வருணத்தை பிரித்துள்ளார்கள். மாடுகள் என்றால் உயர் வருணம். எருமைகள் என்றால் பஞ்சம இனம் என்று பிரித்து வைத்துள்ளார்கள். வருண பேதம் எங்கிருந்தாலும் பகுதறிவுவாதிகள் அதை உடைத்தெரிய வேண்டும். பால் உற்பத்தியில் மாட்டைவிட எருமைதான் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக அளவில் பொருளாதார மேம்பாட்டிற்கு எருமைகள் தான் உதவு செய்கின்றன.
சில நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் சில மாநிலங்களில் எருமை மாடுகள் உழவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வண்டிகளை இழுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் உழவுத் தொழிலுக்கு எருமை மாடுகள் உதவிபுரிந்து வருகிறது. எனவே அதை நாம் பிரித்து பார்க்க தேவையில்லை. சமூகத்தில் கருமை நிறத்தவர்களை சிலர் ஒதுக்குவதைப்போல, மாடுகளில் கருமை நிறம் கொண்ட எருமை மாடுகளை வழிபாட்டில் சிலர் ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் பொங்கல் தினத்தையொட்டி, எருமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில், எருமை மாடுகளுக்கு பொங்கலிட்டு மாரியாதை செலுத்தி, ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.