திருப்பூரில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 7:52 PM GMT)

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்,

ஜாக்டோ–ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை தலைவர் ஜான் கிறிஸ்டோபர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 2003–ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story