தோட்டக்கலைத்துறை பண்ணையில் வெட்டிய மரத்தை எடுத்துச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


தோட்டக்கலைத்துறை பண்ணையில் வெட்டிய மரத்தை எடுத்துச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2019 9:45 PM GMT (Updated: 18 Jan 2019 7:59 PM GMT)

விருத்தாசலம் தோட்டக்கலைத்துறை பண்ணையில் இருந்து வெட்டிய மரத்தை எடுத்துச்சென்ற டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை அமைந்துள்ளது. இந்த பண்ணையில் மா, பலா, முந்திரி, கொய்யா, மிளகாய், சாமந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு அரசு அறிவிக்கும் விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் இந்த பண்ணையில் இருந்து ஒரு டிராக்டரில் மரங்கள் வெட்டி வெளியே எடுத்துச்செல்லப்பட்டது. இதை பார்த்த சின்னகண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மரம் வெட்டி ஏற்றிச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏலம் எடுக்காமல் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறைகேடான வகையில் வெட்டி கடத்தப்படுவதாக கூறி கோ‌ஷம் எழுப்பினர்.

இது பற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உரிய பணம் செலுத்தி ரசீது பெற்று மரத்தை வெட்டி டிராக்டரில் ஏற்றிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story