விழுப்புரத்தில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ– ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அருமுத்துவள்ளியப்பா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நடராசன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் செல்லைய்யா, மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி, தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் கோவிந்தன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நடராஜன், அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, மத்திய செயற்குழு உறுப்பினர் சிங்காரம் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை விதிகளுக்கு புறம்பாக பணிமாற்றம் செய்யப்படும் திட்டத்தையும், ஆசிரியர் விரோத போக்கு செயல்பாட்டை கைவிட வேண்டும், 3,500 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசாமி நன்றி கூறினார்.