மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்


மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 8:22 PM GMT)

மாவட்டத்தில் 5 ஊராட்சிகளில் மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமமாக உருவாக வேண்டும் என்ற நோக்குடன் மத்திய, மாநில அரசால் உன்னத் பாரத் அபியான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தன்னார்வ அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளும் போது அந்த கிராமம் அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் பெற்று சிறந்து விளங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பொட்டபாளையம், கொந்தகை, காஞ்சிரங்குளம், சாயனாபுரம், முக்குடி ஆகிய 5 ஊராட்சிகள் முழுமையான தன்னிறைவு பெற்றிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர்வசதி மற்றும் தனிநபர் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொட்டப்பாளையம் ஊராட்சியிலுள்ள கே.எல்.என்.பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 5 ஊராட்சிகளிலும் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதை ஊராட்சி மற்றும் தனிநபர் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களாக வகுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பார்கள்.

அதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இந்த பணியில் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். கிராமப்பகுதிகளுக்கு நேரிடையாக சென்று, அங்குள்ள மக்களிடம் பழகி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, கிராமமக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேணடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story