ஆவணங்களை பதிவுசெய்ய மறுப்பு: அரசு மகளிர் மருத்துவமனையை செவிலியர்கள் முற்றுகை


ஆவணங்களை பதிவுசெய்ய மறுப்பு: அரசு மகளிர் மருத்துவமனையை செவிலியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Jan 2019 4:15 AM IST (Updated: 19 Jan 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவணங்களை பதிவு செய்ய மறுத்ததை தொடர்ந்து அரசு மகளிர் மருத்துவமனையை செவிலியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

மருத்துவ செவிலியர் உள்ளிட்ட அரசு பணியிடங்களில் போலி சான்றிதழ் கொடுத்து சேருபவர்களை தடுக்கும் வகையில் அவர்களின் படிப்பு உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்–லைன் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நிரந்தர பணியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணங்களை புதுப்பிக்க வலியுறுத்தியுள்ளது.

அதன்படி புதுவையில் இந்த பணிகள் தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று இந்த பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது பற்றிய தகவல் அறிந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் செவிலியர்கள் காலை 6 மணி முதல் அங்கு குவிந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் பணி செய்யும் நபர்களை மட்டும் தான் பதிவு செய்ய உத்தரவு வந்திருப்பதாகவும், மற்றவர்களை அனுமதிக்க முடியாது என்று மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பதிவு செய்யும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர், இது தொடர்பாக சுகாதாரத்துறையிடம் கலந்து பேசி ஏற்கனவே பணியில் உள்ள மற்றும் வேலைக்காக காத்திருக்கும் அனைத்து செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை பதிவு செய்யும் வகையில் கால அட்டவணை வெளியிடப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story