தென்தாமரைகுளம் அருகே காரில் கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்


தென்தாமரைகுளம் அருகே காரில் கஞ்சா விற்பனை; கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 19 Jan 2019 4:27 AM IST (Updated: 19 Jan 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே காரில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்பேரில் போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா சப்ளை செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நேற்று காலை தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுக்குப்பாறை தேரிவிளை ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது, அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரின் அருகில் சென்றனர்.

அந்த காருக்குள் 6 வாலிபர்கள் இருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும், 6 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். உஷாரான போலீசார் துரத்திச் சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகறது. அவர்கள் அமர்ந்து இருந்த காரை சோதனை செய்த போது காருக்குள் 1¼ கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21), திவாகர் (25), ஹரிபிரகதீஸ் என்ற வெங்கடேஷ் (20), சேர்மத்துரை (19), பகவதிநாதன் (19), அஸ்வின் (19) என்பதும், காரில் அமர்ந்து இருந்து அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து, காருடன் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைதான அஜித் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்துள்ளார். ஹரிபிரகதீஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பகவதிநாதன் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான போலீசார் கைதான 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். கைதானவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது யார்? எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது? என்பது குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்பனையில் மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story