சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் : 4 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
பெங்களூருவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை 4 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கடந்த டிசம்பர் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது மந்திரி சபையில் இருந்து 2 மந்திரிகள் நீக்கப்பட்டனர். புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசை சேர்ந்தவர். மற்றொருவரான சங்கர், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆவார்.
இதையடுத்து இந்த 2 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பா.ஜனதா கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற அக்கட்சியின் 104 எம்.எல்.ஏ.க்கள், அங்கு ஒரு தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், தங்களின் ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னருக்கு கடிதம் எழுதினர். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரசை சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் இதுவரை யாரும் பதவியை ராஜினாமா செய்யவில்லை.
மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி உள்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் முகாமிட்டு இருப்பதாவும், அவர்கள் காங்கிரசை விட்டு விலக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இது கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தகவல்கள் வெளியானது. பா.ஜனதா குதிரைபேர அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் பெங்களூருவில் 19-ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்று அதன் தலைவர் சித்தராமையா ஏற்கனவே அறிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி சட்டமன்ற காங்கிரஸ் குழு கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
குழுவின் தலைவர் சித்த ராமையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர். மாலை 6 மணி வரை வருகை தந்தனர். அதிருப்தி பட்டியலில் இடம் பெறாத பீதர் பசவ கல்யாண் தொகுதியை சேர்ந்த நாராயணராவ் எம்.எல்.ஏ. மாலை 5.30 மணி வரை கூட்டத்திற்கு வரவில்லை.
இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே தனது செல்போன் மூலம் நாராயணராவை தொடர்பு கொண்டு பேசினார். அந்த போனை சித்தராமையாவிடம் ஈஸ்வர் கன்ட்ரே கொடுத்தார்.
அதில் பேசிய சித்தராமையா, “எங்கு இருக்கிறாய், ஏன் இன்னும் கூட்டத்திற்கு வரவில்லை” என்று கேட்டார். அதற்கு அவர், “சார், விமான நிலையத்தில் இருந்து காரில் வந்து கொண்டிருக்கிறேன். வந்து விடுகிறேன்” என்றார். இறுதியில் அவர் வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இ்ந்த கூட்டத்தில் நியமன உறுப்பினர் உள்பட 80 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி(கோகாக் தொகுதி), உமேஷ் ஜாதவ்(சிஞ்சோலி), நாகேந்திரா(பல்லாரி புற நகர்), மகேஷ் கமடள்ளி (அதானி) ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதில் உமேஷ் ஜாதவ், பேக்ஸ் மூலம் சித்தராமையாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவசர வேலையால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் காரணம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது.
கூட்டத்தை புறக்கணித்த 4 எம்.எல்.ஏ.க்களில் ரமேஷ் ஜார்கிகோளியை மட்டும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாகவும், மேலும் அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்புவது என்றும் காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் முடிவடைந்ததும், 76 எம்.எல்.ஏ.க்களும் சொகுசு பஸ்கள் மூலம் விதான சவுதாவில் இருந்து பெங்களூரு பிடதி அருகே உள்ள ஈகிள்டன் ரெசார்ட் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசியல் நிலைமை சீரடையும் வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அங்கேயே தங்க வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை 8 முதல் 10 எம்.எல.ஏ.க்கள் வரை புறக்கணிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதன் மூலம் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்பட்டது.
ஆனால் நேற்று நடைபெறற் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தை 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே புறக்கணித்தனர். அதிலும் 2 பேர் அதற்கான காரணத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு ஆபத்து இல்லை என்றே சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story