மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்தை தடுக்க அவசர சட்டம் - மந்திரி சுதிர் முங்கண்டிவார்
கடுமையான கட்டுப்பாடுகளை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று மராட்டிய மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி நடத்த 2005-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மதுபான விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு இந்த தடையை நீக்கியது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது.
இதையடுத்து மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்தை தடுக்கும் வகையில் 2016-ம் ஆண்டு பா.ஜனதா அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. அதில் அழகிகள் நடனத்தை கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும், அழகிகளை பார்வையாளர்கள் நெருங்கக்கூடாது, அழகிகள் மீது பணமழை பொழியக்கூடாது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால் நடன விடுதிகள் தொடங்க முடியாத நிலை உருவானது.
அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து மதுபான விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு விதித்த கடுமையான கட்டுப்பாடுகளை ரத்து செய்து நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதனால் மீண்டும் மும்பையில் நடன விடுதிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான நடன அழகிகள் தங்களது தொழிலுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று மந்திரி சுதிர் முங்கண்டிவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்கிறது. இருப்பினும் நடன விடுதிகளை மீண்டும் நடத்த விடக்கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளோம். நடைபெற இருக்கும் வாராந்திர மந்திரி சபை கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் கலாசார ஒழுக்கத்தை பாதுகாக்கவும் நடன விடுதிகளுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவர கூட தயங்கமாட்டோம்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் கிடைத்ததும் வக்கீல்கள் அதை படித்துவிட்டு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவசர சட்டம் கொண்டு வருவோம். அதில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து வலுப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அப்படி அவசர சட்டம் கொண்டு வருவது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுவது ஆகாதா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “அனைத்து கட்சிகளும் நடன விடுதிக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதில் ஒன்றுப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் இந்த முறை அதனை சிறப்பாக செய்துகாட்டுவோம்” என்றார்.
Related Tags :
Next Story