கோவில்பட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
கோவில்பட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
நெல்லையில் பொதுக்கூட்டம்நெல்லையில் எம்.ஜி.ஆரின் 102–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக காலை 11 மணிக்கு கோவில்பட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதற்காக கோவில்பட்டி–இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வுஇதனை முன்னிட்டு, கோவில்பட்டியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது எம்.ஜி.ஆரின் 102–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நெல்லையில் நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழர்களின் பாரம்பரிய உணர்வான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது அ.தி.மு.க. அரசு. எனவே திருச்சி விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக, 2 ஆயிரம் காளை மாடுகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்கு தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, நெல்லைக்கு வருகிறார்.
உற்சாக வரவேற்புதூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டியில் காலை 11 மணி அளவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவில்பட்டி இனாம் மணியாச்சி ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அப்போது அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.
எண்ணற்ற திட்டங்கள்அ.தி.மு.க. ஆட்சியில்தான் ஏழைகளின் பசியை போக்க இலவச அரிசி, பெண்களின் வேலைப்பளுவை குறைக்க இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட உதவித்தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், பின்னர் ரூ.18 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. தாய்–சேய் நலனுக்காக சஞ்சீவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தாலிக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பிளஸ்–2 படித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டதாரி பெண்ணுக்கு ரூ.50 ஆயிரமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இலவச வெள்ளாடுகள், கறவை பசுக்கள் வழங்கும் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது. ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டால் காலம் போதாது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் பெண்களின் நலனுக்காக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. அரசுக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனை பொறுக்க முடியாமல் கனிமொழி எம்.பி. போன்றவர்கள் தவறாக விமர்சனம் செய்கின்றனர்.
தேர்தல் கூட்டணிதேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பார்கள்.
வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2–வது முறையாக சென்னையில் நடக்கிறது. இந்த மாநாடு மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.