ஆனைமலை அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா? வனஅதிகாரி விளக்கம்
ஆனைமலை அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா? என்பது குறித்து வன அதிகாரி விளக்கினார்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்த சோமந்துறை சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவரது தென்னந்தோப்பில் பொன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். பொன்ராஜின் மகன் கருப்பையா (15) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று மயில் ஒன்றை துரத்திக்கொண்டு வந்ததை கருப்பையா பார்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்த தகவலை அடுத்து வனப்பாதுகாப்பு படையின் வனச்சரகர் மணிகண்டன், வனவர் பிரபாகரன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இத்தகவல் அப்பகுதி முழுக்க பரவியது. இதனால் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் கூறியதாவது:–
கருப்பையா கூறிய தகவலின் அடிப்படையில் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் ஆய்வு செய்தோம். பாலாற்றை ஒட்டி இந்த தோப்பில் சிறுத்தை நடமாடியதற்கான கால் தடங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும் இப்பகுதியில் சிறுத்தை நடமாட வாய்ப்புள்ளது என்பதால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்கலாம் என்றும் ஆலோசனை செய்தோம். எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க வனவர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்களைக்கொண்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டோம். தொடர்ந்து கருப்பையாவிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர் கூறிய தகவல்களின் அடிப்படையிலும், சிறுத்தைப்புலி நடமாடியதாக கூறிய பகுதியில் நடத்திய ஆய்வின் அடிப்படையிலும் அப்பகுதியில் புனுகுபூனைதான் சுற்றித்திரிந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
அப்பகுதியில் புனுகுபூனை, காட்டுப்பூனை ஆகியவை அதிகளவில் உள்ளன. ஆகவே சிறுத்தை குட்டிபோலவே தோற்றமுள்ள புனுகுபூனையை பார்த்துதால் கருப்பையா சிறுத்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆகவே பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பீதியடையத் தேவையில்லை. சிறுத்தை நடமாட்டம் இல்லை. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்களிடையே விரிவாக எடுத்து கூறி விளக்கமும் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.