முதல்–அமைச்சரை எளிதில் சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கின்றனர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பேட்டி


முதல்–அமைச்சரை எளிதில் சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கின்றனர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2019 10:30 PM GMT (Updated: 19 Jan 2019 7:33 PM GMT)

தமிழக மக்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்கின்றனர் என்று அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், எம்.ஜி.ஆர். 102–வது பிறந்த நாள் விழாவையொட்டி பொதுக்கூட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊட்டி நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 10 நாள், 3 மாதம், 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறி வந்தார். ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரே‌ஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.ஆயிரம் பொங்கல் பரிசை தமிழக அரசு வழங்கியது. இதனை ஏற்க மனமில்லாமல் தி.மு.க.வினர் மறைமுகமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ‌ஷயான், மனோஜ் ஆகியோர் மூலம் குற்றம் சாட்ட தூண்டி உள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஜாமீனில் எடுத்து உள்ளனர். தமிழக மக்கள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எளிதில் சந்தித்து குறைகளை தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டதால், தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்து. ஆனால், அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிட தயாராக இருந்தது. தற்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம, கிராமமாக சென்று கிராமசபை கூட்டம் நடத்துகிறார். ஆனால், இந்த கூட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இல்லை. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராமசபை கூட்டங்களில் தங்களது நிர்வாகிகள் கலந்துகொள்ளும் படி தெரிவித்து இருந்தார். அவர் கூறியதை வைத்து தி.மு.க.வினர் கிராமசபை கூட்டம் நடத்துகின்றனர்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், பூத் கமிட்டி, நகர, மாவட்ட அளவில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மாநகரம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளில் கட்சியின் நிர்வாகிகள் செயல்பாடுகள் அனைத்தும் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ரஜினி, மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story