வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் அரசுக்கு அமைச்சர் கோரிக்கை


வைகை அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் அரசுக்கு அமைச்சர் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2019 10:00 PM GMT (Updated: 19 Jan 2019 7:48 PM GMT)

திருப்புவனம்–மானாமதுரை வைகை பூர்வீக 2–ம் பகுதி பாசன விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அரசுக்கு, அமைச்சர் பாஸ்கரன் கோரிக்கைவிடுத்தார்.

சிவகங்கை,

திருப்புவனம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:– மணலூர் எல்லையில் இருந்து 43 கி.மீ. வரை உள்ள திருப்புவனம் மற்றும் மானாமதுரை ஒன்றியங்களில் 87 கண்மாய்கள் மூலம் 40 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வறட்சி காரணமாக இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.

வைகை அணையில் வைகை பூர்வீக பாசன 2–ம் பகுதிக்கான 167 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை தற்போது திறந்துவிட்டால் விவசாயிகளுக்கு மிகவும் பயனாக இருக்கும். அத்துடன் இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை நீக்கவும் முடியும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு கலெக்டர் ஜெயகாந்தன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் வைகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதேபோல அமைச்சர் பாஸ்கரன் முதல்–அமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோருக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story