சிவகங்கை அருகே சாலை அமைக்கும் பணி தாமதத்தால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை அருகே சாலை அமைக்கும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் விரைவில் பணியை முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை–மதுரை சாலையில் முத்துப்பட்டி அருகே மானகுடி, சக்கந்தி வரை செல்லும் தார்ச்சாலை உள்ளது. இதன் வழியாகத்தான் மானகுடி, கொட்டகுடி, பில்லத்தி, பைசஸ்பார்க், பாசாங்கரை, சக்கந்தி ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் (2018) மாதம் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. முதல் கட்ட பணிக்காக சரளை கற்கள் பரப்பி கிராவல் மண் மூலம் சாலை செப்பனிடப்பட்டது. அந்த பணி நிறைவடைந்து 4 மாதங்கள் ஆன நிலையில், இன்று வரை தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது.
இதனால், மானகுடி, கொட்டகுடி, சக்கந்தி உள்ளிட்ட கிராமங்களுக்கு அந்த பகுதி வழியாக இருசக்கரம் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழை காலங்களில் போது இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வருவோர், விபத்தில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் மானகுடி, சக்கந்தி சாலையை தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.