விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது: தீக்குச்சிகளை பற்ற வைத்த சிறுமி உடல் கருகி பலி
தீக்குச்சிகளை பற்ற வைத்து விளையாடிய சிறுமி உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்,
மதுரை திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்த பாறைபத்தி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. கட்டிட தொழிலாளி. அவருடைய மகள் வைரச்செல்வி (வயது 4).
இவள் வீட்டின் முன்பு தீப்பெட்டியை கையில் வைத்துக்கொண்டு தீக்குச்சியை பற்றி வைத்து விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பற்ற வைத்த தீக்குச்சி திடீரென அவளது பாவாடையில் விழுந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் ஆடை முழுவதும் தீ மளமளவென பரவியது. சிறுமியின் அலறல் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆனாலும், சிறுமி வைரச்செல்வி பலத்த தீக்காயம் அடைந்தாள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவளை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்குச்சிகளை பற்ற வைத்து சிறுமி விளையாடிய விபரீத விளையாட்டு, அவளது உயிருக்கே ஆபத்தாக முடிந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.