வேல்ராம்பட்டு ஏரியில் பிரான்சு மாணவர்களுடன் கவர்னர் கிரண்பெடி ஆய்வு
பிரான்சு மாணவர்களுடன் வேல்ராம்பட்டு ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை தேங்காய்த்திட்டு துறைமுக முகத்துவாரத்தில் மணல் தேங்குவதால் மீன்பிடி படகுகள் செல்ல முடியாமல் மீனவர்கள் திணறுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளை கவர்னர் கிரண்பெடி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது துறைமுக முகத்துவார பகுதிகளை மணல்வாரி கப்பல் மூலம் தூர்வாருமாறு அதிகாரிகளிடம் கவர்னர் வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின்கீழ் பிரான்சில் இருந்து புதுவை வந்துள்ள மாணவர்களுடன் சேர்ந்து வேல்ராம்பட்டு ஏரிக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு மரம் நடும் பணிகளை பார்வையிட்டார்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் படகுகளை இயக்க அறிவுறுத்தினார். பின்னர் சாலை பாதுகாப்பு குழுவினருடன் மரப்பாலம் சந்திப்புக்கு வந்த கவர்னர் கிரண்பெடி அங்கு போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தி அதை ஒரு மாதிரி சிக்னலாக மாற்ற அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, துணை வனக்காப்பாளர் தியாகராஜன், புதுவை நகராட்சியின் செயற்பொறியாளர் சேகர், கவர்னர் மாளிகையின் குறைகேட்பு அதிகாரி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் கவர்னரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
களம் மற்றும் துறை ஆய்வுகள், அரசுத்துறை அதிகாரிகளுக்கு நடத்திய தேர்வுகள் அடிப்படையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி வருவாய் மற்றும் வரி வசூலை பெருக்கிட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது. கழிவுகளை அகற்றுவது, மழைநீர் சேகரிப்பது ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு தேவை.
வரி வசூலிப்பு, தூய்மைப்பணிகளில் மனிதவளம் குறைவாக உள்ளது. இதற்கு காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே காரணம். ஆக்கிரமிப்புகளை தடுக்க கொம்யூன் பஞ்சாயத்துகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினரை கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களை உருவாக்கவேண்டியதும் அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.